
தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக திகழும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.), கடந்த ஆறு தசாப்த கால தேர்தல் பயணத்தில் பல்வேறு வெற்றிகளையும் சவால்களையும் சந்தித்துள்ளது. அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளை கடந்து வந்துள்ள இந்த கட்சி, தமிழக அரசியலில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.
தி.மு.க. தனது ஆரம்ப எழுச்சியை 1962 தேர்தலில் 50 இடங்களை வென்று பதிவு செய்தது. அதன் பின்னர் 1967-ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் 137 இடங்களை கைப்பற்றி முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 1971-ல் கருணாநிதி தலைமையில் 184 இடங்களை வென்று கட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கட்சியின் தேர்தல் வரலாற்றில் 5 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அவை 1967, 1971, 1989, 1996 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகள். குறிப்பாக 1996 தேர்தலில் 173 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி கண்டது.
ஆனால் தி.மு.க. பல சரிவுகளையும் சந்தித்துள்ளது. 1991 தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று கடுமையான தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் 1996-ல் மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2011-ல் 23 இடங்களுக்கு குறைந்த கட்சி, 2016-ல் 89 இடங்களாக உயர்ந்து, 2021-ல் 133 இடங்களை பெற்று ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
ஓட்டு சதவீதத்திலும் கட்சி ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளது. 1996-ல் அதிகபட்சமாக 53.8% வாக்குகளை பெற்றது. 1971-ல் 48.6% வாக்குகள் கிடைத்தன. அதேசமயம் 1980 மற்றும் 2011 தேர்தல்களில் குறைந்தபட்சமாக 22% அளவில் மட்டுமே வாக்குகள் கிடைத்தன. 2021 தேர்தலில் 37.7% வாக்குகள் பெற்று வலுவான நிலையை காட்டியது.
அண்ணாவின் சிந்தனையில் தொடங்கி, கருணாநிதியின் அரசியல் அனுபவத்தை கடந்து, ஸ்டாலின் தலைமையில் புதிய கட்டத்தை நோக்கி பயணிக்கும் தி.மு.க., 2026 தேர்தல் முடிவுகளால் மீண்டும் வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 1971க்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் சாதனை நடைபெறுமா என்பது இன்று தெரியவர உள்ளது.