எடப்பாடி
எடப்பாடி சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தேவையான எண்ணிக்கையில் முன்மொழிந்தவர்களை உறுதி செய்ய முடியாததால் அவரது வேட்பு மனு தேர்தல் அதிகாரிகளால் நிருபரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாற்று வேட்பாளராக அனுப்பப்பட்ட வேறொருவரின் வேட்பு மனுவும் அதே காரணத்தால் நிராகரிக்கப்பட்டு தவெக, தொகுதியில் எந்த வேட்பாளரையும் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இச்சூழலில் அருண்குமார் கடத்தப்பட்டுவிட்டதாகச் சர்ச்சை எழுந்தது. தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூன், எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் தன் தலைமைக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அவர் கருப்பு ஆடு என்றும் விமர்சித்து இருந்தார். இதன் காரணமாக எடப்பாடி தொகுதியில் தவெக எந்த வேட்பாளரையும் நிறுத்தாத நிலை உருவானது. இந்த சூழ்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டசபை தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்” என்று தொடங்கியுள்ளார் விஜய். எடப்பாடி சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார், நீண்டகாலமாக தமிழக வெற்றிக் கழக ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகச் செயல்பட்டவர் என்றும், நம்முடைய சகோதரர் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போதைய சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் தவெக நிர்வாகி பிரேம்குமாரையும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் தமிழக வெற்றிக் கழகம் ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். நமது முழு ஆதரவுடன் களம் காணும் பிரேம்குமாரை மனத்தளவில் நமது வேட்பாளராகக் கருதி, தேர்தல் ஆணையம் அளித்துள்ள 12‑வது வரிசை எண் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டார்.
மேலும், தவெக குடும்பத்தைச் சேர்ந்த பிரேம்குமாரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கட்சி நிர்வாகிகளையும் எடப்பாடி தொகுதி மக்களையும் விஜய் அன்புடன் கேட்டுக்கொண்டார். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியை அடைய யார் யாரெல்லாம் முயன்றார்களோ அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டும் வகையில் பிரேம்குமார் வெற்றி பெற வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இது, தேர்தலுக்கு முன் எடப்பாடி தொகுதியில் தவெக அரசியலை மீண்டும் சூடுபிடிக்கச் செய்ய விஜய் நோக்கியிருக்கும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.