கொழும்பு:

இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து “மிலான்” (MILAN) என்ற பெயரில் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு மற்றும் போர் தொடர்பான திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வங்காள விரிகுடா கடலில் சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்தியாவுடன் பல்வேறு நாடுகளின் கடற்படைகளும் பங்கேற்றன. அதில் ஈரானை சேர்ந்த ஐஆர்ஐஎஸ் டினா ரக் (IRIS Dena) என்ற போர்க்கப்பலும் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த ஈரான் போர்க்கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 180 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஈரான் போர்க்கப்பல் இன்று அதிகாலை இலங்கையின் கலி (Galle) நகருக்கு அருகே உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் விளைவாக போர்க்கப்பல் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

கப்பல் மூழ்கத் தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் அவசர உதவி கோரி சிக்னல் அனுப்பியுள்ளனர். இந்த தகவலை அறிந்த இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

போர்க்கப்பல் மூழ்கியபோது அதில் இருந்த பலர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் 32 பேரை இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து கலி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கப்பலில் இருந்த மற்ற 148 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து கடலில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? அல்லது அது வேறு ஏதேனும் காரணத்தால் மூழ்கியதா? என்ற விவரங்கள் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நீர்மூழ்கிக் கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது பற்றியும் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. அமெரிக்காவை சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் சில வட்டாரங்களில் எழுந்துள்ளன.

ஏற்கனவே இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மர்மமான முறையில் மூழ்கிய இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.