தெஹ்ரான்:

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பிறகு ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உலகின் முக்கிய கடல் வழித் தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் எடுத்துள்ள புதிய முடிவு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகளவில் எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய பாதையாக விளங்கும் இந்த நீரிணை வழியாக தினமும் பல்வேறு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணம் செய்து வருகின்றன. எனவே இங்கு விதிக்கப்படும் எந்த கட்டுப்பாடும் உலக பொருளாதாரத்திற்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பொதுவாக கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் பயணம் செய்ய ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சீனாவுக்கு ஈரான் தனிப்பட்ட முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு பின்னால் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தபோதிலும், சீனா அந்த தடைகளை முழுமையாக ஏற்கவில்லை. அதேபோல், ஈரானுடன் பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை தொடர்ந்து பேணியும் வந்துள்ளது.

மேலும், தற்போதைய போர் சூழ்நிலையிலும் சீனா ஈரானுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நன்றி தெரிவிக்கும் வகையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை உலகளவில் மிக முக்கியமான கடல் வழித் தடமாகும். உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரிய பகுதி இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. எனவே இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக வெளியான தகவல் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை உலகளாவிய அளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.