சென்னை: தவெக ஆட்சி அமைப்பு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது அறிக்கையில் கூறியதாவது:
சட்டசபைத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கவர்னரின் கடமை என்ன?
கவர்னரின் கடமை
சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது தான் அரசியல் விதி. இது தான் பாராளுமன்ற மரபு.
அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றமே. கவர்னர் மாளிகை அல்ல. இது தான் 1994இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு.
தமிழக கட்சிகளுக்கு பாராட்டு
இந்த அரசியல் விதியை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சரியாக விளக்கி வலியுறுத்தியதை நான் பாராட்டுகிறேன், என்று ப.சிதம்பரம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுகிறது. ஆளுநர் ராஜேந்திரவிஸ்வநாத் அர்லேகர் பெரும்பான்மை நிரூபணம் கோரி அழைப்பு விடுக்கவில்லை.
இதை திமுக கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் கண்டித்துள்ளன. ஆளுநரின் செயல் அரசியல் விதிகளுக்கு மாறாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ப.சிதம்பரத்தின் அறிக்கை தமிழக அரசியல் களத்தில் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மேலிடத்திலிருந்து குரல் கேட்கப்பட்டுள்ளது.