ரோம்: கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் நெருங்கிய நண்பனாகக் கருதப்படுகின்றன. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக அவை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் மூடப்பட்டதால், டால்பின்களின் வாழிடங்கள் குறைந்து வருகின்றன.
இந்த சூழலில், மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவில் முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசு முடிவு செய்தது. சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் 2023-ஆம் ஆண்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இயற்கைச் சூழலில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சரணாலயத்தின் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன. பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு இந்த சரணாலயம் திறக்கப்படும் என இத்தாலி சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.