புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணமாக இது அமையவுள்ளது.
ஜூலை மாத முதல் வாரத்தில் இந்தியா வரவுள்ள சனே தகாய்ச்சி, முதலில் தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா – ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, வர்த்தக உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் ஜப்பான் பிரதமர் பங்கேற்பார் என ஆரம்பத்தில் தகவல் வெளியானது. எனினும், ஜப்பான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் உள்நாட்டு நிர்வாக பணிகள் காரணமாக போதிய கால அவகாசம் இல்லாததால் கவுகாத்தி பயணம் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் வலுப்பெற்று வரும் நிலையில், சனே தகாய்ச்சியின் இந்த பயணம் இருநாடுகளின் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் புதிய முன்னேற்றங்கள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு சனே தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் என்பதால், இந்த சந்திப்புக்கு சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.