மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில், டிசம்பர் 3 அன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உச்சியில் உள்ள தீபத்துாணில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் பழமையான நடைமுறை பராம்பரியமாக நடைபெறுகிறது. சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் மண்டபம் அருகிலுள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம், இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு தடை செய்தது. அதன்பின்னர், கோவில் முன்புறத்தில் உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, மதுரை மாவட்டம் எழுமலை ராமரவிக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவில், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்துாணில் தீபம் ஏற்ற சட்டபூர்வமாக தடை இல்லாதது, எனக் குறிப்பிட்டு, கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் தீபம் ஏற்றுவது தவறான நடைமுறை என வாதிடப்பட்டது.
அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுகிறது என்பதற்காக மனு தவறானது என நீதிபதி முன் வாதிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை விசாரித்தார்; அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேரில் ஆய்வு செய்தார். விசாரணை முடிவில், நீதிபதி உச்சியில் உள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வெளிப்படுத்தினார். இந்து சமயநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துக்களை கேட்டு, உத்தரவினை பிறப்பித்தார்.