கேரள சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்ட படங்களும் திட்டமிட்டபடி திரையிடப்படும் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் கேரள சல்சித்ரா அகாதெமியின் ஒருங்கிணைப்பில் டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெறும் இந்த சர்வதேச விழா, உலகம் முழுவதிலிருந்தும் தேர்வான படங்களை திரையிடுவதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு விழாவிற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை திரையிட மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்தது. இதில் 4 படங்களுக்கு மட்டும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 15 படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசு விளக்கவில்லை என விழா ஒருங்கிணைப்பாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக பாலஸ்தீன விவகாரத்தை மையமாகக் கொண்ட சில படங்களே அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலில் அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் அனுமதி கிடைக்காத படங்களையும் திட்டமிட்டபடி திரையிட முடிவு செய்துள்ளதாக கேரள சல்சித்ரா அகாதெமியின் தலைவர் ரெசூல் பூக்குட்டி அறிவித்தார். கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசு இந்த முடிவுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அனுமதி மறுக்கப்பட்ட படங்களின் பட்டியலில், பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஆவணப்படங்கள் மட்டுமல்லாமல், உலக சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற படங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புகழ்பெற்ற சோவியத் இயக்குநர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் 100 ஆண்டுகள் பழமையான “பேட்டில்ஷிப் பொட்டெம்கின்” திரைப்படமும் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலில் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா வரலாற்றில் புரட்சிகரமான படைப்பாக கருதப்படும் இந்த திரைப்படம் கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
திரைப்பட விழா என்பது கலைஞர்கள், பார்வையாளர்கள், விமர்சகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சினிமாவின் பல்வேறு பார்வைகளை பகிரும் மேடையாகும். இத்தகைய சூழலில், அனுமதி மறுக்கப்பட்ட படங்களையும் திரையிடும் கேரளாவின் முடிவு, கலை சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமையை வலியுறுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு இந்திய சினிமா உலகில் புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.