ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரை அருகே யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த மகிழ்ச்சியான சூழலை சிதறடிக்கும் வகையில் திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. கூட்டத்தை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கொடூரச் சம்பவம் உலக நாடுகளின் தலைவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய அரசு அவசர ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

தாக்குதல் நடந்த தருணத்தில், 43 வயதான அலி அகமது என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தைரியமாக மடக்கிப் பிடித்தார். அவர் தாக்குதலாளியின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, மற்றொரு நபர் சுட்டதில் அலி அகமது படுகாயமடைந்தார். இதே நேரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சாஜித் அக்ரம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த அவர் அங்கேயே திருமணம் செய்து குடும்பம் அமைத்ததாகவும், இந்தியாவிற்கு மிகக் குறைந்த முறை மட்டுமே வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதான சாஜித் அக்ரம், தனது 24 வயது மகன் நவீத் அக்ரம் உடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திலேயே சாஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நவீத் அக்ரம் படுகாயமடைந்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் பயங்கரவாத சிந்தனைகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியாவோ அல்லது தெலுங்கானாவில் உள்ள எந்த நபருடனும் இந்தச் சம்பவத்துக்கு தொடர்பு இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.