தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரி, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தாக்கல் செய்துள்ள கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக மொட்டையடித்து, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகள் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்குத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்திப்பதோடு, தொடர் விபத்துகளில் சிக்கி இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளால் பெயரளவிற்குச் சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும், முழுமையான முறையில் பணிகள் நடைபெறாததால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தலைதூக்கின. இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் தொடர் விபத்துகளும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டன. பொதுமக்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளின் போரைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் நூதனப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி முன்பு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு, தங்களது தலையை மொட்டையடித்துக் கொண்டும், சங்கு ஊதியவாறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் கந்தவேல் என்பவரும், பயணியர் விடுதி முன்பு முருகன் என்பவரும் தங்களது தலையை மொட்டையடித்துக் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சுணக்கம் காட்டும் அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோவில்பட்டி நகராட்சி பொறுப்புப் பொறியாளர் சணல்க குமாரிடம் சமூக ஆர்வலர்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்திற்கும் சென்று அங்கும் மனுவை அளித்தனர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனுவை அளிக்கும்போது, உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினபாபுவிற்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பான சூழல் நிலவியது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் நடத்திய இந்த நூதனப் போராட்டம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.