தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை (CSR) வெளிப்படைத்தன்மையுடனும், நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைகள் அல்லது திட்டங்களுக்கு நேரடியாக நிதியை வழங்கும் வகையிலும் ‘நலம்TN’ (www.tnhealthfoundation.org) என்ற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, எச்டிஎப்சி வங்கி மற்றும் பரிவர்த்தனை நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின்கீழ் (CSR), தமிழகத்தில் உள்ள 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.70 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர், தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, ஓசூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 10 படுக்கை வசதிகளுடன் இந்த மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு இந்த 11 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அரசுச் செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜ்மோகன் மற்றும் எச்டிஎப்சி வங்கியின் உயர் அதிகாரிகளான என். பிரேம் ஆனந்த், ரமேஷ் வங்குரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 10 எண்ணிக்கையிலான ஏ.பி.எஸ் பேனல்கள், மடக்கும் வசதியுடன் கூடிய பக்கவாட்டு கைப்பிடிகள், 6 அங்குல சக்கரங்கள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான வசதிகள் மற்றும் 4 அங்குல மெத்தை கொண்ட 5 அம்ச மோட்டார் இயங்கு படுக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், எக்ஸ்-ரே இயந்திரம், ஈ.சி.ஜி இயந்திரம், இதயத் துடிப்பு சீராக்கி (Pacemaker), 10 சிரிஞ்ச் பம்புகள், 10 மல்டிபாரா மானிட்டர்கள், குழந்தைகளுக்கான வென்டிலேட்டர், 2 பைபேப் (BiPAP) இயந்திரங்கள், 2 உறிஞ்சும் கருவிகள், இரத்த வாயு பகுப்பாய்வி (Blood Gas Analyzer) மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் போன்ற மிக நவீன உபகரணங்கள் இந்த மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்தார். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை உயர்த்த அனைத்து தொழில் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் CSR மற்றும் இதர நன்கொடைகளை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கிட்னி திருட்டு விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், மருத்துவக் கவுன்சில் மூலமாகவும் துறை ரீதியான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எந்தவித தலையீடும் இன்றி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளை விடத் தற்போது டெங்கு பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீட் தேர்வு குறித்த அரசின் நிலைப்பாடு குறித்துப் பேசுகையில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், நாய்க்கடி பாதிப்புகள் குறித்தும், தனியார் கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண வசூலைத் தடுப்பது குறித்தும் உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு விரைந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். சித்த மருத்துவத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.