அமராவதி:

ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ஒரு நாள் அலுவல்முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுபெற்ற திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளார்.

விமான நிலையம் மற்றும் செமிகண்டக்டர் ஆலை தொடக்கம்:

ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ள போகபுரத்தில் சுமார் ரூ.5,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை’ ரிப்ப வெட்டித் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த APACT நிறுவனத்துடன் இணைந்து, ASIP டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் அமையவுள்ள ரூ.460 கோடி மதிப்பிலான ‘ASIP செமிகண்டக்டர்’ திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 9.6 கோடி செமிகண்டக்டர் சிப்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், இப்பகுதியில் செமிகண்டக்டர் உற்பத்தி சார்ந்த வலுவான துணை சூழலமைப்பு உருவாக்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கடத்தி திட்டங்கள்:

பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், சுமார் ரூ.5,550 கோடி முதலீட்டில் ‘ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள்’ (SPV) மூலம் பவர்கிரிட் நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ள கர்னூல்-IV புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலத்தின் (REZ) முதல் கட்ட (4.5 GW) திட்டத்திற்கான மின்கடத்தி அமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சுமார் ரூ.3,550 கோடி செலவில் முடிக்கப்பட்ட கர்னூல் காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் மண்டலங்களுக்கான மின் கடத்தி அமைப்பு திட்டங்களையும், பவர்கிரிட் நிறுவனத்தின் சார்பில் ரூ.820 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட அனந்தபுரம் (2,500 மெகாவாட்) மற்றும் கர்னூல் (1,000 மெகாவாட்) சூரிய ஆற்றல் மண்டலங்களுக்கான மின் கடத்தி அமைப்பு திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்:

இவை தவிர, போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் விதமாக ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், சில திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலை-565 பெஞ்சலகோனா–ஏர்பேடு பிரிவில் அமைந்துள்ள லிங்கசமுத்திரத்தில் புதிய உயர்மட்டப் பாலத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பெரிதும் உதவும். மேலும், விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத் இடையேயான பயண தூரத்தையும் நேரத்தையும் குறைப்பதுடன், பிராந்திய அளவிலான பொருளாதார மற்றும் போக்குவரத்து இணைப்பை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.