மதுரை: படிப்பு மட்டுமே ஒருவரின் திறமையையும் தகுதியையும் நிர்ணயிக்காது. செயல்பாடுகளும் நடத்தையும்தான் தகுதியைத் தீர்மானிக்கும் என மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி, திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு சரமாரியாகப் பதிலடி கொடுத்தார்.

மதுரையில் பிரச்சாரத்தின்போது சுந்தர்.சி பேசுகையில், பழனிவேல் தியாகராஜன் மத்திய தொகுதியில் கழிப்பிட அறைகள், சமுதாயக்கூடங்கள், ரேஷன் கடைகள் கட்டியதை சாதனையாகச் சொல்கிறார். ஒரு அமைச்சரின் சாதனையா இது? படித்தவர், பண்பாட்டு உடையவர் என்று கூறிக் கொள்ளும் அவர், தொகுதிக்கு பெரிய திட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை?
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பெரும் வருமானத்தைப் பயன்படுத்தாமல், கவுன்சிலர்கள் செய்யும் சிறிய வேலைகளைச் சாதனையாகப் பெருமைப்படுத்துகிறார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட மேயரின் கணவர் பொன்.வசந்துடன் உங்கள் தொடர்பு என்ன? அவரை ஏன் கைது செய்தனர் போலீசார்?
இந்திராணியை மேயர் பதவியில் அமர வைத்தது யார்? மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் உங்கள் ஆதரவு கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட ஜெய்பாலாஜி யார்? அவர் உங்கள் வலது கை. வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் லட்சுமணன் உங்கள் ஆளா?
இவை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் என் பற்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறீர்கள். என்னை கூத்தாடி என்கிறீர்கள். உங்கள் துணை முதல்வர் உதயநிதி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர். தைரியம் இருந்தால் அவரிடம் இதைச் சொல்லுங்கள்.
காமராஜர், எம்ஜிஆர், உங்கள் தலைவர் கருணாநிதி படிக்கவில்லை. படிப்பு மட்டுமல்ல, செயல்பாடும் நடத்தையும்தான் தகுதி. இதுவரை உங்களுக்கு எதிராகப் போட்டியிட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாத நீங்கள், எனக்கு மட்டும் ஏன் பதில் அளிக்கிறீர்கள்? ஏனென்றால் நான் கேட்பது மதுரை மக்களின் கேள்விகள்.
படித்தவர் என்று சொல்லிக் கொள்வது ஏன்? நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி சாதாரண துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? உங்களுக்கு தகுதியில்லாததால் தானே? ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்து தொகுதிக்கு பெரிய திட்டங்களை ஏன் கொண்டு வரவில்லை?
என்னை சினிமா சங்கி எனப் பட்டப்பெயர் வைத்துள்ளீர்கள். திருப்பி உங்களுக்கு பட்டப்பெயர் வைக்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அந்தளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன். படித்தவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள், படிப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்.
மாற்றத்தின் நேரம் வந்துவிட்டது. ஒரு பாரம்பரிய குடும்பத்துக்கு இரு முறை வாய்ப்பு கொடுத்தது போதும். முதல் முறை எம்எல்ஏவாக, இரண்டாம் முறை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்ததால் செய்ய முடியவில்லை என்றீர்கள். இப்போது மூன்றாம் முறையும் நினைத்ததைச் செய்யவில்லை என்று நிற்கிறீர்கள்.