சென்னை – டிசம்பர் 26 முதல் ரெயில் கட்டண உயர்வு; புறநகர் மின்சார ரெயில்களுக்கு மாற்றமில்லை

போக்குவரத்து சேவையில் புறநகர் மின்சார ரெயில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த கட்டணத்தில், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக பயணம் செய்யும் வசதி காரணமாக, பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சேவையை விரும்புகின்றனர். சென்னையில் கடற்கரை–செங்கல்பட்டு, சென்ட்ரல்–அரக்கோணம், சென்ட்ரல்–கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அதிக அளவில் பயணம் செய்வதால், எப்போதும் கூட்டம் நிரம்பிய நிலையிலேயே இந்த ரெயில்கள் இயங்குகின்றன.

இந்த நிலையில், ரெயில்வே துறை டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்புகளில் 215 கிலோமீட்டர் வரை எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 215 கி.மீக்கு மேல் பயணிக்கும் போது, கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு ரூ.10 மட்டுமே கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.

மேலும், மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த உயர்வு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தினசரி பயணிகள் அதிகம் பயன்படுத்தும் சீசன் டிக்கெட்டுகளுக்கும் எந்த மாற்றமும் இல்லை என ரெயில்வே உறுதியளித்துள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட தினசரி பயணிகள் பாதிக்கப்படமாட்டார்கள்.

சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை என்பதால், குறுகிய தூர பயணிகள் எந்த சுமையையும் சந்திக்க வேண்டியதில்லை. நீண்ட தூர பயணிகளுக்கு மட்டுமே சிறிய அளவில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

ரெயில்வே துறை, “பொது மக்களுக்கு சுமையாக அமையாமல், குறைந்த அளவில் மட்டுமே கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் மாற்றமின்றி தொடரும்” என விளக்கம் அளித்துள்ளது.