வாஷிங்டன் – எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் 16 புகைப்படங்கள் நீக்கம்; டிரம்ப் புகைப்படமும் அடக்கம்
அமெரிக்காவின் பிரபல நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்குப் பிறகும், எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்தன. அந்த விசாரணை ஆவணங்களில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, “எப்ஸ்டீன் ஃபைல்ஸ்” எனப்படும் அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, கடந்த 19ஆம் தேதி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் தொகுப்பை வெளியிட்டனர்.
அந்த ஆவணங்களில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், ஹாலிவுட் நடிகர் கிறிஸ் டக்கர், இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இவர்களில் சிலர் ஏற்கனவே மறைந்துவிட்ட நிலையில், மற்ற பிரபலங்கள் தங்களுக்கும் எப்ஸ்டீன் வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளனர்.
ஆனால், இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க நீதித்துறை (DOJ) இணையதளத்தில் இருந்து 16 முக்கிய கோப்புகள் எவ்வித விளக்கமுமின்றி நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட கோப்புகளில், டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், டிரம்ப்–மெலனியா–எப்ஸ்டீன் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படங்கள், மேலும் சில நிர்வாண ஓவியங்களும் அடங்கியிருந்தன.
இந்த நடவடிக்கை, “உண்மைகளை மறைக்கும் செயல்” என நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். “பொது மக்களுக்கு வெளிப்படையாக வெளியிடப்பட்ட ஆவணங்களை, எந்த விளக்கமுமின்றி நீக்குவது, விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்ஸ்டீன் வழக்கு, அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆவண நீக்கம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால், வழக்கின் வெளிப்படைத்தன்மை குறித்து பொதுமக்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.