தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த தேர்தல் ஆணையம் புதிய QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் அறைகளுக்குள் நுழைய முடியும்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சாதனை அளவில் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பான அறைகளில் சிசிடிவி கண்காணிப்புடன் பலத்த போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை தடுக்க தேர்தல் ஆணையம் இந்த புதிய பாதுகாப்பு முறையை செயல்படுத்துகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு வருபவர்கள் முதலில் புகைப்பட அடையாள அட்டையை அதிகாரிகள் நேரடியாக சரிபார்ப்பார்கள். பின்னர் QR குறியீடு ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதி வழங்கப்படும்.

இந்த நடைமுறை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அதிகாரிகள், வாக்கு எண்ணும் ஊழியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் ஏஜெண்டுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.

மேலும், ஊடகத்துறையினருக்காக தனி மீடியா மையமும் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கிய அதிகாரப்பூர்வ அனுமதி கடிதம் இருந்தாலே அவர்கள் உள்ளே செல்ல அனுமதி பெறுவார்கள்.

இந்த புதிய முறை எதிர்கால மக்களவை தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து பொதுத் தேர்தல்களிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கான வாக்கு எண்ணிக்கை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் நோக்கமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மிகுந்த கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.