
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் மக்கள் மீது கடுமையாக பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெளியே செல்வது கடினமாகும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.
மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிக்க இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள் மற்றும் நிழல் பகுதிகளை நாடி வருகின்றனர். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாலைகள் வெறிச்சோடிய காட்சி பல இடங்களில் காணப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108.32°F (42.4°C) வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வேலூர் மாவட்ட மக்கள் கடும் வெப்ப அவதியை சந்தித்தனர்.
கரூர் பரமத்தியில் 106.7°F, ஈரோட்டில் 106.52°F, திருச்சியில் 105.62°F, திருத்தணியில் 105.08°F என கடும் வெப்பம் நிலவியது. மதுரை விமான நிலையம் 104.9°F, சென்னை மீனம்பாக்கம் 104.36°F, நாமக்கல் 104.18°F வெப்பம் பதிவாகியது.
நாகப்பட்டினம், மதுரை நகரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் 102°F மேல் வெப்பம் நிலவியது. சென்னை நுங்கம்பாக்கம் 100.4°F, கோயம்புத்தூர் மற்றும் பாளையங்கோட்டை தலா 100.22°F பதிவு செய்தன.
வானிலை நிபுணர்கள் கூறுகையில், அடுத்த சில நாட்களிலும் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். கத்திரி வெயில் மே 4 முதல் தொடங்கவுள்ளதால் வெப்ப அலை இன்னும் தீவிரமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற வெளிச்செல்லலை தவிர்க்கவும், அதிக தண்ணீர் குடிக்கவும், இலகுவான உடைகள் அணியவும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலில் அதிக நேரம் இருக்காமல் கவனிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.