ஈராக்,
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில், அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் முன்னாள் உயரதிகாரியான சாதௌன் சப்ரி அல்-ஃகைசிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈராக் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தூக்கு தண்டனை திங்கள்கிழமை (பிப்ரவரி 9) நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், அவருக்கு எதிராக நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்களுள், ஈராக் நாட்டின் ஷிட் முஸ்லீம் மதத் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான முகமது பாஃகிர் அல்-சதர் குறிப்பிடத்தக்கவராக கருதப்படுகிறார். சதாம் ஹுசைனின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அல்-சதர், ஆட்சிக்கு கடும் சவாலாக மாறியிருந்தார். இதனால், அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அரசின் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.
இந்த சூழலில், முகமது பாஃகிர் அல்-சதர் மற்றும் அல்-ஹகீம் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை கைது செய்து, சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவங்களில் சாதௌன் சப்ரி அல்-ஃகைசிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், சதாம் ஹுசைன் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களிலும் அல்-ஃகைசி தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஈராக் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட நீண்டகால விசாரணையின் முடிவில், அல்-ஃகைசி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சட்ட நடைமுறைகளுக்கிணங்க இந்த தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஈராக் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொடூரங்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியளிக்கும் நோக்கில், இத்தகைய வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சதாம் ஹுசைன் ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஈராக் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. குறிப்பாக, அரசியல் எதிர்ப்பாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இன்று வரை சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.
இந்த நிலையில், அல்-ஃகைசிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம், சதாம் ஹுசைன் ஆட்சிக் கால குற்றங்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், கடந்த கால கொடுமைகளுக்கு சட்ட ரீதியான பதில் அளிக்கப்படுவதாக ஈராக் அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.