சென்னையில் பயணிகளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக, 2வது ஏசி மின்சார ரெயில் சேவையை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் முதல் ஏசி மின்சார ரெயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், கூடுதல் சேவைக்கான நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த 2வது ஏசி மின்சார ரெயில், 12 பெட்டிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பணி இரண்டு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த ரெயில் அன்னனூர் ரெயில்வே யார்டில் நிறுத்தப்பட்டு பல்வேறு தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏசி ரெயிலை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்குவது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. காரணம், இந்த வழித்தடத்தில் தினசரி 200க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சுமார் 4 லட்சம் பேர் தினமும் இந்த பாதையில் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேர பீக் ஹவர்களில் கடும் நெரிசல் நிலவுகிறது.
அதே நேரத்தில், தற்போது இயங்கும் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்திலும் கூடுதல் ஏசி ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் எந்த பாதையில் முதலில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.
இந்த புதிய ஏசி ரெயிலில் அமர்ந்து 1,116 பேர் பயணம் செய்யலாம். நின்று கொண்டு 3,798 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் 4,914 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.
சென்னையின் புறநகர் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த 2வது ஏசி மின்சார ரெயில் பார்க்கப்படுகிறது. அலுவலகம் செல்லும் பயணிகள், தினசரி வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள் என பலருக்கும் இது பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.