சென்னையில் டெலிவரி ஊழியரை ஆபாசமாகத் திட்டிவிட்டு நேரில் மன்னிப்பு கேட்ட இளம்பெண்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் தற்போதைய காலகட்டத்தில், நமக்குத் தேவையான உணவு, உடைகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கும் டெலிவரி நிறுவனங்கள் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன. ஸ்விக்கி, சொமாட்டோ, பிளிங்கிட், ஜெப்டோ, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

வெயில், மழை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஒவ்வொரு ஆர்டரையும் சரியான நேரத்திற்கு விநியோகம் செய்யப் போராடும் இந்த ஊழியர்கள், சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் முறையற்ற நடத்துதலால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியரை இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளால் வசைபாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், உணவை ஆர்டர் செய்தபோது அவர் தனது வீட்டின் முகவரியைத் தவறாகப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி டெலிவரி செய்ய வந்த கிஷோரி என்ற ஊழியர், முகவரி தவறாக இருந்ததால் குறிப்பிட்ட இடத்தை அடைவதில் சிரமத்தைச் சந்தித்துள்ளார். இதன் காரணமாக உணவு டெலிவரி செய்யச் சற்று தாமதமானது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், உணவைக் கொண்டு வந்த கிஷோரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அப்பெண், பொதுவெளியில் கேட்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையான, அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகளால் அந்த டெலிவரி ஊழியரை அர்ச்சனை செய்தார். மேலும், அந்த ஊழியரின் குடும்பத்தினரையும் இழுத்து மிகவும் இழிவாகப் பேசினார். இதோடு நிறுத்தாமல், தான் தவறு செய்துவிட்டு அந்த ஊழியர் மீதே குற்றம்சாட்டி காவல்துறையினருக்கு தொலைபேசியில் புகாரளிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகின.

வைரலான வீடியோ – கொந்தளித்த நெட்டிசன்கள்: இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவிய நிலையில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த டெலிவரி ஊழியரை அடிமை போல் நடத்தி, மிகக் கேவலமாகப் பேசிய அந்த பெண்ணிற்கு எதிராக இணையவாசிகளும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். “தவறான முகவரியைக் கொடுத்துவிட்டு உழைக்கும் இளைஞரை இப்படி நடத்துவதா?” என்றும், அந்த பெண் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.

தேடிக் கண்டுபிடித்து மன்னிப்பு கோரிய பெண்: சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்ட அந்த இளம்பெண், உடனடியாகத் தன் தவறை உணர்ந்தார். தொடர்ந்து, டெலிவரி ஊழியர் கிஷோரை தேடிக் கண்டுபிடித்து, தான் செய்த செயலுக்கு நேரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “நடந்த தவறுக்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தால் மற்ற டெலிவரி ஊழியர்களின் மனமும் காயப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். தயவுசெய்து இந்த வீடியோவை யாரும் மேற்கொண்டு பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், அந்த ஊழியரிடம், “இனிமேல் நாம பிரெண்ட்ஸ்.. இனிமே சண்டை இல்லை.. ஓகேவா?” என்று பேசிச் சமரசம் செய்து கொண்டார்.

தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களின் சேவைக்காக உழைக்கும் ஊழியர்களிடம் கண்ணியத்துடனும் மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.