ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்: கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை இளைஞர் உயிருடன் மீட்பு!
சென்னை: சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் லைக்ஸ்களுக்காக ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் கலாச்சாரம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அச்சுறுத்தும் மலைப்பகுதிகள் மற்றும் பாறை முனைகளில் நின்று ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சுற்றுலாத் தளமான கொழுக்குமலையில் ரீல்ஸ் எடுக்க முயன்ற சென்னை இளைஞர் ஒருவர் 200 அடி ஆழப் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா சென்ற நண்பர்கள் குழு: சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனியார் உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான மூணாறு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
தொடர்ந்து, தமிழக – கேரள மாநில எல்லையில், தேனி மாவட்டம் குரங்கணி மலை உச்சியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கொழுக்குமலைப் பகுதிக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக மூணாறு அருகே உள்ள சூரியநல்லி என்ற பகுதியிலிருந்து நேற்று அதிகாலை ஜீப் மூலம் கொழுக்குமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்குச் சென்றடைந்த அவர்கள், அதிகாலை சூரிய உதயத்தின் அழகைக் கண்டு ரசித்துள்ளனர்.
ஆபத்தான பாறையில் ரீல்ஸ் வீடியோ: காலை சுமார் 8 மணி அளவில், கொழுக்குமலைப் பகுதியில் அமைந்துள்ள ‘சிங்கப்பாறை’ என்ற ஆபத்தான இடத்தில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, கார்த்திக் எவ்வித பாதுகாப்பு உணர்வும் இன்றி மிகவும் ஆபத்தான பள்ளத்தின் ஓரத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் நழுவி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சுமார் 200 அடி ஆழமுள்ள மலைப் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அலறித் துடித்தனர்.
2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு: உடனடியாக இது குறித்துக் கேரள மாநில தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக எல்லைப் பகுதியான குரங்கணி மற்றும் போடியில் இருந்தும் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
200 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்த கார்த்திக், பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அடர்ந்த மரங்களும் பாறைகளும் நிறைந்த அந்தப் பள்ளத்தில் இறங்கி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடி கார்த்திக்கைப் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்துக் குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு வேலி அமைக்கக் கோரிக்கை: கடந்த மாதம் இதே சிங்கப்பாறை பகுதியில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதல் தோல்வியால் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. விபத்துகள் அதிகளவில் நடப்பதால் இந்தச் சிங்கப்பாறை பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல ஏற்கனவே நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ‘ரீல்ஸ்’ மோகத்தால் தடையை மீறி ஆபத்தான இந்தப் பகுதிக்குள் நுழைகின்றனர். எனவே, மேற்கொண்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழையாதவாறு உடனடியாக வலுவான தடுப்பு வேலிகள் (Fencing) அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.