சென்னை :

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி நகரில் ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் 1980-ம் ஆண்டிலும், நகர பேருந்து நிலையம் 1996-ம் ஆண்டிலும் கட்டப்பட்டது. இவை இணைந்து 8.57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இப்பேருந்து நிலையங்களைப் பயன்படுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, கல்வி அலுவலகம், மின்சார அலுவலகம் உள்ளிட்ட பல அரசு துறைகளுக்கு எளிதில் சென்றடைய முடிகிறது. இதனால், பழைய பேருந்து நிலையம் மக்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து வந்தது,” என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்நிலையில், புதிதாக 05.02.2026 அன்று திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அனைத்து பேருந்துகளும் அங்கு மாற்றப்பட்டன. இதன் விளைவாக பொதுமக்கள், சிறு வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் கடுமையான சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நிலைமை மாற்றப்படவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீமான் மேலும் தெரிவித்திருப்பதாவது: “மக்களின் எதிர்ப்பும் ஊடகங்களின் ஒளிபரப்பும் காரணமாக, தேர்தல் கண்துடைப்பாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 9 முதல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை, அரூர் ஆகிய திசைகளுக்கான பேருந்துகள் பழைய நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் இது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. இதனால் மக்களின் அடிப்படை சிக்கல் தீரவில்லை,” என்றார்.

மேலும், “பேருந்து நிலைய மாற்றத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும் ஆண்டுக்கு சுமார் ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற மக்கள் எதிர்ப்பு, வணிகச் சீர்கேடு நிலவிய நிலையில், தமிழக அரசு மக்களின் நலனை கருதி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் முழுமையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சீமான் வலியுறுத்தியுள்ளார்.