சென்னை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் போட்டியிட உள்ளன. அதேபோல், நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நான்கு முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு சுருக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணிகள், முதலில் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், அது டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு, தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை 68,467 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 75,035 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, 6,568 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.