தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலி அடைந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“இன்று (24.11.2025) காலை சுமார் 11.30 மணியளவில், தென்காசி–கடையநல்லூர் இடையிலான துரைச்சாமியாபுரம் பகுதியில், எதிரெதிரே வந்த இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைவில் குணமடைய உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன், எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் உதயசூரியன் ஆகியோர் மதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலும் ஆறுதலும் தெரிவிப்பார்கள்.”
என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்தார்.