தூத்துக்குடியில் பஸ் – பைக் மோதல்: வடமாநில வாலிபர் பலி
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு வாலிபரும் ஒரே பைக்கில் திருச்செந்தூரில் உள்ள ஜன்னல் வடிவமைக்கும் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
மாப்பிள்ளையூரணி தெற்கு காமராஜ் நகரைச் சேர்ந்த ராமநாதன் மகன் முனியசாமி (19) மற்றும் உத்தரபிரதேசம் பகப்பூரைச் சேர்ந்த பியூரி அலி மகன் சிரமான் அலி (24) ஆகியோர் அங்கு பணியாற்றி வந்தனர். நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து பைக்கில் திருச்செந்தூருக்கு பயணித்தபோது, முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்து பைக்கை மோதியது.
இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு கடுமையான காயம் அடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாலை நேரத்தில் சிரமான் அலி உயிரிழந்தார். முனியசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து, பேருந்தை ஓட்டிய நாசரேத் சின்னமாடன் குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பொன்மாரிமுத்து (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.