புதுடெல்லி:
வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திட்டத்தின் 18-வது கட்டமாக, சுமார் 61 ஆயிரம் பேருக்கு அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. இதையொட்டி, நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் அவர் உரையாற்றிய போது, இந்தியா தற்போது பல நாடுகளுடன் முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு, இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
இன்று அரசு பணியில் நியமனம் பெற்றவர்கள், தங்களுக்கு கிடைத்த நியமனக் கடிதத்தை ஒரு வேலை ஆணையாக மட்டும் கருதாமல், தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அழைப்பாகவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பணிக்கான உறுதிமொழியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் போது, கடந்த காலங்களில் குடிமக்கள் சந்தித்த சிரமங்களை நினைவில் வைத்து, தங்கள் பதவிக்காலத்தில் அத்தகைய அனுபவங்கள் மக்களுக்கு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது ‘குடிமக்களே கடவுள்’ என்ற நோக்குடன் சேவை செய்ய வேண்டும் என பிரதமர் கூறினார். பொதுமக்களின் நலனே முதன்மை என்ற அடிப்படையில் செயல்படுவதன் மூலம் தான் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீப காலங்களில், நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இதன் காரணமாக, கட்டுமானம் மற்றும் தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்கி, அனிமேஷன், டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் பயனாக, தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரும் நன்மைகளை பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். ஜி.எஸ்.டி.யில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் வர்த்தக செயல்பாடுகளை எளிதாக்கியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவை அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக சூழலுக்கும் சாதகமாக அமைந்துள்ளன என பிரதமர் மோடி கூறினார்.