ஜக்தால்பூர்:
மாவோயிசம் ஒருபோதும் சமூகத்துக்கு பயன் அளித்ததில்லை; அது இருந்த இடமெல்லாம் அழிவையே பரப்பியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் மாவோயிச அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தால்பூர் நகரில் நடைபெற்ற ‘பஸ்தர் பண்டும் 2026’ என்ற கலாச்சார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித் ஷா, மாவோயிசத்தின் வரலாறையும் அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். “மாவோயிசம் எந்த சமூகத்துக்கும் நல்லதைக் கொடுத்ததாக வரலாறு சொல்லவில்லை. அது கொலம்பியா, பெரு, கம்போடியா போன்ற நாடுகளில் எப்படி அழிவை உருவாக்கியதோ, அதேபோல இந்தியாவின் சில பகுதிகளிலும் வன்முறையையும் பின்னடைவும் ஏற்படுத்தியது” என்றார்.

மேலும், “நாட்டில் மாவோயிச அச்சுறுத்தலை முற்றாக வேரறுப்பது அரசின் உறுதியான இலக்கு. மார்ச் 31-ஆம் தேதிக்குள் அந்த இலக்கு நிறைவேறும். இன்னும் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து, நாட்டின் பொது நீரோட்டத்தில் இணைய வேண்டும். சரணடைவோருக்கு கண்ணியமான மறுவாழ்வு வழங்கப்படும். இந்த முயற்சியில் சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது” என தெரிவித்தார்.

மீதமுள்ள மாவோயிஸ்டுகளில் இளம் பழங்குடிப் பெண்களும் இருப்பது கவலை அளிப்பதாக கூறிய அமித் ஷா, “அவர்கள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி சரணடைய வேண்டும். சரணடைந்தவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. ஆனால், ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துபவர்கள், கண்ணிவெடிகளை புதைப்பவர்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை தீக்கிரையாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தவிர்க்க முடியாது. ஆயுத வன்முறைக்கு ஆயுதங்களாலேயே பதில் அளிக்கப்படும்” என்று எச்சரித்தார்.

அரசு யாருடனும் சண்டையிட விரும்பவில்லை என்றும், பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். “கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கிறார்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றவர்களாக மாறுகிறார்கள். இப்படிப்பட்ட கொடூர எண்ணங்கள் மனிதநேயத்துக்கு முற்றிலும் எதிரானவை” என்றார்.

பல தசாப்தங்களாக மாவோயிஸ்டுகள் பள்ளிகளை மூடி, கல்வியைத் தடை செய்து, பஸ்தர் பகுதியில் எழுத்தறிவின்மையை வளர்த்ததாக குற்றம்சாட்டிய அமித் ஷா, தற்போதைய மாற்றங்களையும் எடுத்துரைத்தார். “இப்போது பஸ்தர் விரைவான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டு, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படுகின்றன” என்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பஸ்தர், நாட்டிலேயே மிகவும் வளர்ந்த பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக மாறும் என்பதே அரசின் இலக்கு என அவர் தெரிவித்தார். “பஸ்தரின் உண்மையான அடையாளம் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அல்ல; அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமே அதன் அடையாளம்” என்றும் கூறினார்.

மேலும், ‘பஸ்தர் பண்டும் 2026’ விழாவின் 12 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்த குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் அமித் ஷா அறிவித்தார்.