தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாமல் நேராக கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. புதிய அரசியல் வரவாக களமிறங்கிய த.வெ.க., எடப்பாடி தொகுதியை தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. முதல் தேர்தலிலேயே கட்சியின் செயல்பாடு குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து த.வெ.க. வேட்பாளர்களையும் இன்று சென்னை வருமாறு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர்கள் வழங்கிய 17சி படிவத்தையும் கொண்டு வருமாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் வேட்பாளர்களை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், “இந்த தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறுவோம். நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். நேராக பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், “இதுவரை நீங்கள் நன்றாக உழைத்துள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் மிகவும் கவனமாக இருங்கள்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல் வட்டாரங்களில், பிற கட்சிகள் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்கலாம் அல்லது கட்சி மாற்ற முயற்சிகள் இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு விஜய் இவ்வாறு முன்னெச்சரிக்கை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே விஜய் எடுத்த இந்த முடிவு, த.வெ.க. அமைப்பு கட்டுப்பாட்டை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.