நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய இடங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வருகை தரவிருப்பதாக வெளியான தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சூழலில், தவெக தலைவர் விஜய் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலிலும், பின்னர் மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலிலும் அவர் வழிபாடு நடத்தினார். மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், மும்மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மே 2-ஆம் தேதி அதிகாலை வேளாங்கண்ணி பேராலயத்திலும், நாகூர் தர்காவிலும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வேகமாகப் பரவின.

இந்தத் தகவலைக் கேட்ட ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் இன்று அதிகாலை முதலே வேளாங்கண்ணி தேவாலயத்தைச் சூழ்ந்து கொண்டனர். சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவாலயத்தின் முன்பும், அருகிலுள்ள கட்டடங்களின் மொட்டை மாடிகளிலும் திரண்டதால் அப்பகுதியில் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. ஏராளமானோர் திரண்டதால், வழக்கமாக வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

எதிர்பார்த்த நேரம் கடந்தும் விஜய் வராததால், கூடியிருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, தேவாலய நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் தேவாலயத்திற்கு வரவில்லை என்றும், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், தேவாலயத்தில் திருப்பலி நிகழ்வுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

நடிகர் விஜய்யின் இந்தத் திடீர் வருகை ரத்து குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கு விஜய் வரும்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவதால் பொதுமக்களுக்கு இடையூறும் கூட்ட நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இந்தப் பயணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள சூழலில், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் நோக்கில் விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தவெக தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றாலும், வாக்கு எண்ணிக்கை நாளுக்காக அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.