வார விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

வரும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எனத் தொடர்ந்து வரக்கூடிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை அன்று 295 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 310 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தலா 55 பேருந்துகள் என மொத்தம் 110 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பிற நகரங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் 20 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, பயணிகளின் வருகைக்கு ஏற்பத் தேவையான அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 7,446 பயணிகளும், சனிக்கிழமை பயணம் செய்ய 3,161 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 7,379 பயணிகளும் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணத்தை உறுதி செய்யவும் விரும்பும் பயணிகள் இணையதளம் அல்லது அலைபேசி செயலி மூலமாக முன்கூட்டியே தங்களது பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளின் வசதிக்காக இந்தச் சிறப்பு பேருந்து இயக்கத்தினைத் தொடர்ந்து கண்காணிக்க அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்தி எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.