வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!
சென்னை: வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், பெங்களூருவிற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வார விடுமுறை நாட்களான ஜூலை 24 (வெள்ளிக்கிழமை), ஜூலை 25 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பிற முக்கிய இடங்களிலிருந்தும் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அவர்கள் எவ்வித இடையூறான்றியும் விரைவாகத் தங்களது இலக்குகளை அடையவும் ஏதுவாக, தினசரி இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளின் விவரம்:
-
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய தென் மற்றும் மேற்கு மாவட்ட இடங்களுக்கு ஜூலை 24 அன்று 395 சிறப்பு பேருந்துகளும், ஜூலை 25 அன்று 330 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
-
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்: கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய இடங்களுக்கு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களிலும் தினமும் தலா 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
மாதவரம் பேருந்து நிலையம்: மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களிலும் நாள்தோறும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
பிற நகரங்கள் & திரும்பும் பயணம்: இதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய வணிக நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் வசதியாக, ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து முக்கிய இடங்களில் இருந்தும் 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
முன்பதிவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்:
வார இறுதியை முன்னிட்டு பயண முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெள்ளிக்கிழமை பயணத்திற்காக 6,487 பயணிகளும், சனிக்கிழமைக்காக 2,387 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை திரும்புவதற்காக 7,089 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தொலைதூரம் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணங்களை www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும், TNSTC Mobile App செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படுவதைக் கண்காணிக்கவும், பயணிகளுக்கு வழிகாட்டவும் அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்களும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.