டெல்லி:
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சுமார் 100 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில்கள் பெற சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

முதலில் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் விசாரணை தொடங்கிய சிபிஐ, அதன் பின்னர் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் உள்ளிட்டோரை கடந்த மாதம் டெல்லி அலுவலகத்தில் மூன்று நாட்கள் விசாரித்தது.

இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக, விஜய்யை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு கூறப்பட்ட நிலையில், அவர் அரை மணி நேர தாமதமாக 11.30 மணிக்கு சிபிஐ அலுவலகம் வந்தடைந்தார்.

சிபிஐ அதிகாரிகள், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 100 கேள்விகள் எழுப்பினர். இதில் அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுகின்றன. விசாரணை மாலை 5 மணி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.

தேவைப்பட்டால் மீண்டும் விஜயை அழைத்து விசாரணை நடத்த சிபிஐ முடிவு எடுக்கலாம் என தகவல். விஜய் இன்று இரவும் டெல்லியிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தவெக நிர்வாகிகள் அவரது பாதுகாப்புக்காக டெல்லி போலீசிடம் மனு அளித்தனர். போலீசார் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணையின் போது முரண்பட்ட பதில்கள் கிடைத்ததாகவும், அதனால் அதிகாரிகள் மடக்கிக் கிடுக்கிப் பிடி கேள்விகள் எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கின் போது சில நேரங்களில் புஸ்ஸி ஆனந்த் தூங்கிவிட்டார் என்றும், அதிகாரிகள் அவரை எழுப்பி மீண்டும் கேள்விகள் கேட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தற்போது விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், “பராசக்தி” திரைப்படத்துடன் போட்டி போட முடியாது என்பதால், விஜய் படம் வெளியீடு தாமதமாகிறது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.