அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விலகும் பாதையில் மேற்குலக நாடுகள்? – கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பா கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல நாடுகளின் மீது கூடுதல் வரிகளை விதித்து வருவதுடன், மேலும் வரி உயர்வு செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார்.

 

அமெரிக்கா விதித்த வரிகளில் தளர்வு பெற அந்தந்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உறவை தக்க வைத்துக்கொள்ளவும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில், டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்ற டிரம்பின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், சீனா அல்லது ரஷியா அதனை கைப்பற்றிவிடும் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்காக கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இதற்கு ஆதரவு தரவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்தப் பேச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ், கனடா தலைவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் உலக பொருளாதார மன்றத்தில் முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், “வல்லரசுகளின் அதிகாரப் போட்டி நிறைந்த புதிய யுகத்திற்குள் உலகம் நுழைந்துவிட்டது. சீனா ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது; அமெரிக்கா தனது கொள்கைகளை மாற்றி வருகிறது. இந்நிலையில், பிற நாடுகளைச் சார்ந்து இருப்பது ஆபத்தானது. ஐரோப்பா தன்னைத் தானே காக்கும் சுயசார்பு நிலையை அடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “எந்த மிரட்டல்களுக்கும் ஐரோப்பா அடிபணியாது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், எங்களின் பதிலடி உறுதியானதாக இருக்கும். எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

இந்த பின்னணியில், அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விலகி, தனித்த முடிவுகளை எடுக்கும் பாதையில் மேற்குலக நாடுகள் நகரத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி சர்வதேச அரசியலில் முக்கிய விவாதமாக உருவெடுத்துள்ளது.