இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சொக் ஆகியோரைச் சந்திக்க இன்று இஸ்ரேலுக்கு புறப்பட்டார். இரு நாடுகளுக்கிடையேயான வலுவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.

புறப்படும் முன் வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி கூறியதாவது: “எனது அன்பு நண்பர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இஸ்ரேலுக்கு செல்கிறேன். இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து, பன்முகத்தன்மை கொண்ட உறவை உருவாக்கியுள்ளன. நமது நட்பு உறவு பரஸ்பர நம்பிக்கையிலும் முன்னேற்ற நோக்கிலும் நிலைத்து நிற்கிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை பல தளங்களில் விரிவுபடுத்தும் வகையில் முக்கியமான விவாதங்கள் நடைபெறும். குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் இரு நாடுகளின் கூட்டு பணியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடக்கவுள்ளன,” என்றார்.
மோடியின் இப்பயணம், இந்தியா–இஸ்ரேல் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முக்கியமாகக் கருதப்படுகிறது. 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றது இரு நாடுகளுக்கிடையேயான உறவின் வரலாற்று திருப்பமாக அமைந்தது. அதன் பின் இரு நாடுகளும் தொழில்நுட்பம், வேளாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன.
இந்தப் பயணத்தின் போது புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை மற்றும் உலக அமைதிக்கான முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதிக்கவுள்ளதாக வெளிநாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.