கோவை:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்காலம் மக்களுக்கு கொடுமையாக மாறி விட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை காளப்பட்டி நேரு நகரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி சக்தி கேந்திரா தெருமுனை தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார், சிங்கை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை மாவட்ட பா.ஜ. தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார்.
உரையின்போது அண்ணாமலை கூறியதாவது: “ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள். ஆனால் பொதுமக்கள் தான் நடுநிலையோடு முடிவு எடுப்பவர்கள். அவர்களை உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் தெருமுனை பிரசாரம் நடத்தப்படுகிறது,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டில் தற்போது இருண்ட ஆட்சி நிலவி வருகிறது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக்கு மக்கள் தண்டனை அளித்தனர். அதன்பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வர முடியவில்லை. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நிலைமை அதைவிட மோசமாகியுள்ளது,” என்று விமர்சித்தார்.
“கோவை பகுதியில் மின்கட்டண உயர்வின் காரணமாக 325 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அரசு மின்கட்டணத்தை குறைத்து வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தில் 34 கிலோமீட்டர் பாதை இருப்பதாகக் கூறினாலும், மத்திய அரசிடம் அனுப்பப்பட்ட திட்ட வரைவு பிழைகளால் திருப்பி அனுப்பப்பட்டது. மாற்றியமைக்க கோரப்பட்டபோதும் திமுக அரசு அதில் திருத்தம் செய்யவில்லை. அதிமுக ஆட்சியே வந்தால் மட்டுமே கோவைக்கு மெட்ரோ ரயில் கிடைக்கும்,” என்றார்.
“அதிமுக ஆட்சியில் 4.64 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடன் தொகை 10 லட்சம் கோடியை கடந்துள்ளது. இது மக்களின் தோளில் சுமையாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,” என அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.