சென்னை:
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உலகளவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் ஈரான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகச் சங்கிலியில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த நெருக்கடியை ஒன்றிய அரசு கையாளும் விதம் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்வதேச போர் பதற்றத்தின் நேரடி தாக்கமாக தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், மத்திய அரசு தரப்பில் தட்டுப்பாடு இல்லை என்று கூறப்படுவது மற்றும் களநிலவரம் ஆகியவற்றுக்கு இடையில் பெரிய முரண்பாடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல விநியோகஸ்தர்கள் மற்றும் சிலிண்டர் நிறுவனங்களே வெளிப்படையாக தட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்திருப்பது நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் சிறு மற்றும் குறு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் நடுத்தர அளவிலான உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதிய அளவில் எரிவாயு கிடைக்காததால் பல இடங்களில் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இது வணிகத் துறையை மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு இந்த நிலைமை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் விநியோகம் தட்டுப்பாடின்றி நடைபெறுவதை உறுதி செய்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் முழுமையாக முடங்கும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு மட்டுமன்றி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் விநியோகம் கிடைக்காததால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை பாதிக்கும் நேரடி பிரச்சினையாக மாறி வருவதாகவும் அவர் கூறினார்.
எனவே, சர்வதேச போர்ச் சூழ்நிலையை காரணம் காட்டி உள்நாட்டு விநியோகத்தில் தடைகள் ஏற்பட அனுமதிக்காமல், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்று வழிகளை பயன்படுத்தி எரிவாயு இறக்குமதியை சீரமைத்து, வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த பிரச்சினை பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியாக மாறுவதற்கு முன்பே மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.