சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாகவும், அத்தகைய கருத்துகளை முன்வைத்த ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக கண்டிப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது: திரைப்படத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவமான நடிப்பாலும் மனிதநேய பண்பாலும் கோலோச்சி வரும் சிறந்த கலைஞர் ரஜினிகாந்த். தமிழ் திரைப்பட உலகிற்கு உலகளவில் பெருமை சேர்த்தவர் என்றும், உலகம் முழுவதும் தமிழ்சினிமாவின் முகமாக விளங்குபவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத் துறையில் அவருடைய சாதனைகள் எண்ணற்றவை. அதனை மதித்து இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளையும் பெற்றவர். இவ்வாறு பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்று திரைத்துறையின் உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த் என அவர் குறிப்பிட்டார்.
அதோடு ரஜினிகாந்த் ஒரு சிறந்த ஆன்மிக சிந்தனையாளர் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். எளிமையான வாழ்க்கை முறையாலும், மனிதநேய அணுகுமுறையாலும் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பல ஆண்டுகளாக சமூக நலன் சார்ந்த கருத்துகளையும் மனித மதிப்புகளையும் முன்னிறுத்தி வரும் அவர், அனைவராலும் மதிக்கப்படும் நபராக திகழ்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் மற்றும் சமூக துறைகளில் உள்ள பல மூத்த தலைவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவராக ரஜினிகாந்த் திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தேசிய தலைவர்களாலும் அவர் மரியாதையுடன் மதிக்கப்படுகிறார். இதுபோன்ற உயர்ந்த மரியாதையும் புகழும் பெற்ற நபரை குறித்துத் தவறான குற்றச்சாட்டுகளை பரப்புவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெரும் தாக்கம் செலுத்தும் நபர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவது சமூகத்தில் தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
எனவே ரஜினிகாந்த் குறித்து பரப்பப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், உண்மை நிலையை புரிந்துகொண்டு பொறுப்புடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.