சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நகரத்தின் அழகையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரப் பலகைகள் அமைக்கும் போது அவை நிலையான அமைப்பில் இருக்க வேண்டும். மேலும், நெகிழ்வு காகிதம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொருட்களில் மட்டுமே அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. சுழற்சி முறையில் காட்சிப்படுத்தப்படும் திரைகள் இருந்தால், ஒவ்வொரு காட்சியும் குறைந்தது 10 விநாடிகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அனிமேஷன் அல்லது முழுமையான வீடியோ காட்சிகள் பொதுவாக அனுமதிக்கப்படாது. அவை வாகனப் போக்குவரத்து இல்லாத பகுதிகள் அல்லது வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டும். நகராட்சிகளின் எல்லைகளில் மற்றும் மாநில அல்லது மத்திய சாலைகளில் விளம்பரங்களை அமைப்பதற்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்; மற்ற இடங்களில் அமைக்க முன் ஆணையரின் அனுமதி அவசியம் பெற வேண்டும்.

விளம்பரப் பலகைகளின் உயரம் தொடர்பாகவும் தெளிவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தரைமட்டத்திலிருந்து அளந்தால், பலகையின் அதிகபட்ச உயரம் 10 மீட்டரை மீறக்கூடாது. மேலும், இத்தகைய பலகைகள் இரண்டாம் மாடி உயரத்தைத் தாண்டாமல் அமைக்கப்பட வேண்டும். அனைத்து விளம்பரப் பலகைகளுக்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உரிமம் இன்றி அமைக்கப்படும் பலகைகள் அனைத்தும் அனுமதியற்றதாக கருதப்பட்டு உடனடியாக அகற்றப்படும். மேலும், விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட பலகைகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய அனுமதியற்ற பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஏற்கனவே உள்ள பலகைகளில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யவும் மார்ச் 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், உரிய அனுமதி இல்லாத அனைத்து விளம்பரப் பலகைகளும் அகற்றப்படும் என முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கோடம்பாக்கம், தியாகராயநகர், அடையாறு, திருவான்மியூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1,25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறி மீண்டும் மீண்டும் பலகைகள் அமைத்தால் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் பற்றிய விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் உரிமம் இல்லாத பலகைகள் குறித்து புகார் அளிக்க 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.