சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்கள், வருமானம், குற்ற வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் இணைக்கப்பட்ட அவரது சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

விஜய் தாக்கல் செய்த தகவலின்படி, அவரிடம் ரூ.404.58 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.220.15 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு கணிசமான அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

அவரிடம் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தனது பெயரில் எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்றும், தண்டனை பெற்ற வழக்குகளும் இல்லை என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். கல்வி விவரமாக, லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்ட நிலையில், அதை நிறைவு செய்யாமல் இடைநிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அவரிடம் 3,132 கிராம் தங்கம் (சுமார் ரூ.4.07 கோடி மதிப்பு) மற்றும் 134.91 காரட் வைரம் (சுமார் ரூ.1 கோடி மதிப்பு) இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் குழந்தைகள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.4 லட்சம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது பூர்வீக சொத்துகளின் மதிப்பு ரூ.21.83 கோடி எனவும், தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.220 கோடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வசம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024-25 ஆண்டில் மட்டும் விஜய் ரூ.184 கோடி வருமானம் பெற்றுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது மொத்த வருமானம் ரூ.734.45 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வைத்திருக்கும் கார்கள் ரூ.7.45 கோடி மதிப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனுடன், விஜய் பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.76 கோடி கடன் வழங்கியுள்ளதாகவும் அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி இருப்பதாகவும், அவரது மனைவியிடம் சுமார் 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில், விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள இந்த சொத்து விவரங்கள், அவரது பொருளாதார நிலையை வெளிப்படுத்துவதோடு அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.