புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோர பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக போட்டியிடுகின்றன. இதனை முன்னிட்டு வாக்கு சேகரிப்பை வலுப்படுத்த பிரதமர் நேரடியாக களமிறங்கியுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.15 மணியளவில் புதுச்சேரி விமான நிலையத்தை அடைகிறார். அங்கு அவருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர், அவர் கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு சென்று, அங்கிருந்து திறந்த வாகனத்தில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அஜந்தா சந்திப்பில் தொடங்கும் இந்த பேரணி, ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற உள்ளது. இந்த வழித்தடம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார்.
ரோடு ஷோவை முடித்த பின், மாலை 5.50 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார். பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கையாக, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே புதுச்சேரி வந்துள்ளனர். விமான நிலையம் முதல் ரோடு ஷோ நடைபெறும் பகுதிகள் வரை முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகளின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், துணை ராணுவப்படையினர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 2 ஆயிரம் துணை ராணுவப்படையினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இணைந்து ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு நகரில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் செல்லும் வகையில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், புதுச்சேரியில் முக்கிய பகுதிகளில் இன்று காலை முதல் இரவு 8 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலை, அண்ணாசாலை, கவர்னர் இல்லம் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பிரதமர் மோடியின் இந்த ரோடு ஷோ, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.