“எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளதால்...” வாக்களித்த பின் நடிகர் சிம்பு கருத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை தி.நகரில் நடிகர் சிலம்பரசன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

சிம்பு பேசுகையில், “அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நேற்று ட்வீட் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாக மாறியுள்ளது. மக்கள் தாமாகவே ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்துள்ளனர். அதையே நல்ல மாற்றமாக நான் பார்க்கிறேன்” என்றார்.

மேலும், “தேர்தலில் மாற்றம் வர வேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அதுவே இறுதி முடிவு” என்று கூறினார்.

அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது” என்று சிரித்தபடி பதிலளித்தார்.

நடிகர் சிம்புவின் இந்த சமநிலை பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.