மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல் எப்போதும் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் பிரியமான இடமாக திகழ்கிறது. இயற்கை எழில், குளிர்ந்த காலநிலை, பசுமை சூழல், மலைப் பாதைகள், ஏரிகள், அருவிகள் என ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகளின் முக்கிய விருப்பமாகும்.
மேலும் மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார் அருவி, பழனி எழில் காட்சி சாலை, கைகாட்டி உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால், தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
தேர்தல் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் இயற்கையை ரசிக்கவும், கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும் பலர் கொடைக்கானலை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.