திருமண உறுதி அளித்து ரூ.9 கோடி மோசடி: அஷு ரெட்டி மீது பரபரப்பு புகார்
ஐதராபாத்: தெலுங்குத் திரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அஷு ரெட்டி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லண்டனில் வசிக்கும் இந்திய இளைஞரைத் திருமணம் செய்யும் எனக் கூறி சுமார் ரூ.9 கோடி ஏமாற்றியதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை சத்யநாராயணா அளித்த புகாரில், தனது மகனைத் திருமண வாக்குறுதி அளித்து நெருங்கிய அஷு ரெட்டி, ஐந்து கிலோ தங்கம், விலையுயர்ந்த சொகுசு கார்கள், பல அடுக்குமாடி குடியிருப்புகளைத் தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஐதராபாத் போலீஸ் பொருளாதாரக் குற்றவியியல் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அஷு ரெட்டி சமூக வலைதளத்தில்: “என்னைப் பற்றிய தவறான தகவல்கள், வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலத்தின் மீதான இந்தப் புகார் அவரது எதிர்காலத் திட்டங்களையும் பாதிக்கலாம்.