
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல்களில் வெவ்வேறு முடிவுகள் வெளியாகியுள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி அதிகரித்துள்ளது.
சில கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் திமுக கூட்டணிக்கு 125 முதல் 145 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது. அதேபோல் பி-மார்கியூ நிறுவனம் 125 முதல் 145 இடங்கள், பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் 120 முதல் 140 இடங்கள், மெட்ரிஸ் நிறுவனம் 122 முதல் 132 இடங்கள் என கணித்துள்ளது.
மற்றொரு புறம், ஜேவிசி நிறுவனம் அதிமுக கூட்டணிக்கு 128 முதல் 147 இடங்கள் கிடைக்கும் என பெரிய முன்னிலை காட்டியுள்ளது. இது தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கணிப்பாகும். அந்த நிறுவனம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது. இது உண்மையாக இருந்தால் தமிழக அரசியலில் வரலாற்று மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.
மேலும் கமஹ்யா அனாலிட்டிக்ஸ் நிறுவனம் மூன்று அணிகளுக்கும் சமமான போட்டி நிலவுவதாக கணித்து, திமுக 78 முதல் 95, அதிமுக 68 முதல் 84, தவெக 67 முதல் 81 இடங்கள் பெறும் என தெரிவித்துள்ளது.
பிரஜா போல்ஸ் நிறுவனம் மட்டும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என 148 முதல் 168 இடங்கள் வரை கணித்துள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு நிறுவனமும் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளதால், உண்மையான தீர்ப்பு மக்கள் வாக்கு எண்ணிக்கை நாளில் தான் தெரியும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள்? புதிய சக்தி உருவாகிறதா? பழைய கட்சிகள் மீண்டும் எழுகிறதா? என்பதற்கான பதில் தேர்தல் முடிவு நாளில் கிடைக்க உள்ளது.