சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ரசிகர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக மைதானத்தை அடைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, போட்டிக்கான மின்னணு டிக்கெட் அல்லது காகித டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள், அதில் உள்ள பிரத்யேக QR குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவாயிலில் ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம்.

இந்த சலுகையின் மூலம் ரசிகர்கள் 2 முறை நுழைவு மற்றும் 2 முறை வெளியேறுதல் வசதியுடன் மெட்ரோவில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர். போட்டி நடைபெறும் நாளில் மட்டும் இந்த சிறப்பு சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசு எஸ்டேட் மற்றும் LIC உள்ளிட்ட மெட்ரோ நிலையங்கள் வழியாக ரசிகர்கள் எளிதாக மைதானத்தை சென்றடையலாம். போட்டி நாளில் அதிக கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரசிகர்களுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மெட்ரோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.