சென்னை: மேற்கு ஆசியப் போர் பதற்றம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்துள்ளது. பல வளர்ந்த நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்த முடியாமல் திணறுகின்றன. அண்டை நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்தாலும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூபாய் 95 என்ற நிலையில் உள்ளது. இது உலகையே வியக்க வைக்கிறது. இக்கட்டான சூழலை முன்கூட்டியே கணித்த மத்திய அரசின் சாமர்த்தியமான திட்டங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளின் எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் சிங்கப்பூர், ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 200 ரூபாயைத் தாண்டியுள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் எரிபொருள் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை சுமார் 95 ரூபாய் என்ற அளவில் நிலையாக நீடிப்பது பலரின் கவனத்தை ஈர்க்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதன் தாக்கம் பொதுமக்கள் மீது குறைவாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இதைப் பற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைசெயலாளர் சுஜாதா சர்மா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.
அப்போது, “உலகளாவிய விலை உயர்வால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ரூபாய் 7 ஆயிரத்தில் இருந்து 11,500 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் எல்.பி.ஜி. விலையும் கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இழப்புகளைச் சந்தித்தாலும், கலால் வரியைக் குறைத்தல், எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரித்தல், பி.என்.ஜி. இணைப்புகளை ஊக்குவித்தல், நிலையான எரிவாயு வினியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றால் நுகர்வோரைப் பாதுகாக்கிறோம்” என்றார்.
ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் லிட்டர் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 200 ரூபாய். ஆனால் இந்தியாவில் (டெல்லி) 95 ரூபாய் மட்டுமே. நாட்டில் எந்த வினியோகஸ்தருக்கும் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தடையற்ற எல்.பி.ஜி. வினியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிலைத்தன்மைக்கு இந்தியாவின் சாமர்த்தியமான இறக்குமதி கொள்கையும் முக்கிய காரணம்.
போர் சூழலை முன்கூட்டியே கணித்து வளைகுடா நாடுகளை மட்டும் நம்பாமல் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயைத் தாராளமாக இறக்குமதி செய்கிறோம். அவசர காலத் தேவைக்கு உத்தேச எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் போதுமான அளவு எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அரசின் தொலைநோக்குப் பார்வை, முறையான திட்டமிடலால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. இது கவனிக்கத்தக்கது.