“தாமரையின் ஒரு இதழைக் கூட அசைக்க முடியாது!” – அண்ணாமலை மற்றும் விஜய் அரசு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடிப் பேட்டி!

மதுரை: வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்ணாமலையின் புதிய இயக்கம், திருப்பரங்குன்றம் தீப வினர்ச்சை, தமிழக வெற்றிக் கழக அரசின் முப்பது நாள் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் போதைப்பொருள் விவகாரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணாமலையால் பாரதிய ஜனதா கட்சி பலவீனம் அடையவில்லை

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பெருமளவில் இணைந்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:

“எங்கள் கட்சியில் உள்ளவர்கள் லட்சியவாதிகள். அங்கே ஏதோ ஒரு லட்சம் பேர் இருப்பதாகச் சொல்வதை நான் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. எங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் இரத்தம் மற்றும் வியர்வை சிந்தி இந்த இயக்கத்தை வளர்த்துள்ளார்கள். எந்தவொரு உண்மையான இளைஞரும் அவரிடம் செல்லவில்லை; சுயநலவாதிகள் மட்டுமே சென்றுள்ளார்கள். அவர் வந்ததால் பாரதிய ஜனதா கட்சி பலம் பெறவில்லை, அவர் போனதால் இந்த இயக்கம் பலம் இழக்கவும் இல்லை. தாமரையின் ஒரு இதழைக் கூட யாராலும் அசைக்க முடியாது. வரும் இரண்டாயிரத்து முப்பத்தியொன்றாம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி பொற்றாமரையாகத் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமரும்.”

மேலும், அண்ணாமலை கட்சியை விட்டுச் சென்றதற்கான காரணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்றும், உண்மையான தொண்டர்கள் என்றும் கட்சியை விட்டுப் போகமாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரஸ் போன்ற கட்சிகள் தான் இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரமும் தவெக அமைச்சரின் இருட்டு அரசியலும்

உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தவெக அமைச்சர்கள் கூறுவது அவர்களின் அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை சாடினார்.

பொதுமக்களின் மற்றும் ஆன்மீக பக்தர்களின் இறையுணர்வை ஏதோ மதக்கலவரம் போல் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று கூறும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு வெளிச்சம் என்பதே பிடிக்காது, அவருக்கு எப்போதும் மின்வெட்டும் இருட்டும் தான் பிடிக்கும் என்று நகைச்சுவையோடு விமர்சித்தார்.

முப்பது நாட்களைக் கூட ஓட்ட முடியாத விஜய் அரசு

திரைப்படங்களில் நூறு நாட்கள் ஓடியதாகப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், தற்போதைய முப்பது நாள் தவெக ஆட்சியைத் திக்கித் திணறித் தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்று தமிழிசை சாடினார். இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்பது அவர்கள் ஆட்சி செய்வதைப் பொறுத்தே அமையும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகள் இந்த அரசுக்குத் தற்காலிகமாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தொப்புள் கொடி உறவு என்று பேசிக் கொண்டு அவர்கள் இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது என்றும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு அதற்குப் பதிலாகத் தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களைத் திறப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.