சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 17வது சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களையும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றியது. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. கடந்த மே 13ஆம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, அதிமுகவை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கெதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகரிடம் தகுதி நீக்க மனு அளித்திருந்தார்.
இந்த சூழலில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு எதிராக, தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை சவால் செய்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுவது அரசியல் சாசனத்துக்கு முரணானது. இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் பாதிக்கும். தொடர்ந்து தேர்தல்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை அரசுக்கு கூடுதல் செலவாகும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை ரத்து செய்து, தகுதி நீக்க மனுக்களை விசாரித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.