சென்னை: தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
ஜூன் 5ஆம் தேதி சமூக ஊடக நேரலையில் அண்ணாமலை, இந்த இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அனைவரையும் அரசியலுக்குள் கொண்டு வரவும், அறம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கவும், கோவையில் ‘அப்துல் கலாம்’ பெயரில் நவீன அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும், அங்கு பயிற்சி பெறும் இளைஞர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம், வரும் செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிகிறது. இதற்கான பெயர், சின்னம், கொடி வடிவமைப்புப் பணிகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இயக்கம் தொடங்கிய 5 நாட்களில் 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதில் 25.2% பேர் ‘ஜென்-ஸீ’ எனப்படும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஆவர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 60,370 பேர் தயாராக உள்ளனர். இவர்களில் 37.7% பேர், அதாவது 22,760 பேர், இளம் தலைமுறை வேட்பாளர்களாக உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், இளம் வாக்காளர்களை குறிவைத்து தனது அரசியல் வியூகங்களை அமைத்ததைப் போலவே, அண்ணாமலையும் அதே உத்தியை கையில் எடுத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு புதிய சவாலாக, ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் இளம் தலைமுறையை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.
இந்த இயக்கம், தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், பாரம்பரிய கட்சிகளின் வலிமையை சோதிக்கும் புதிய சக்தியாக உருவெடுக்கும் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.